உலகின் மிகப்பெரிய தலைவர்களாகக் கருதப்படுபவர்கள் யாவரும் சமுதாய ஈடுபாட்டினால் உயர்ந்தவர்களே. அண்ணல் காந்தி, நெல்சன் மண்டேலா, மதர் தெரேசா, ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லுதர் கிங் ஜுனியர் யாவரும் சமூகத்தைப்பற்றிக் கவலைப்பட்டவர்கள், சகமனிதர்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் உயர்ந்த கொள்கைகளுக்காகவும் தம் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள். தம் சமூகத்தின் மக்களை நேசித்து அவர்களுக்காக வாழ்ந்த மகான்கள் ஒவ்வொரு நாட்டிலும் எத்தைனையோ பேர் உள்ளனர்.
சமுதாய வாழ்வு என்பது மனிதர்களால் தவிர்க்க முடியாதது. நாம் சமுதாயத்தில்தான் பிறக்கிறோம். இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்தில்தான் வளர்கிறோம். அரிஸ்டாட்டில் “மனிதன் சமூக விலங்கு” எனச் சொன்னது முற்றிலும் உண்மை. மனிதர்கள் தனி மரங்களாகவோ அல்லது தனித்தீவுகளாகவோ வாழ்ந்திட முடியாது. சமுதாயம் நலமானதாக இருக்கும்போதுதான் தனிமனிதர்களும் நலமானவர்களாக இருக்க முடியும்.
நம் பெரும்பாலான தேவைகளுக்குச் சமுதாயம் தேவை. நம் உணவை உருவாக்குபவர்கள், நம் ஆடைகளை நெய்து தருபவர்கள், நமது செய்தித் தொடர்புகளை அமைத்துத் தருபவர்கள், நமது எல்லாக் கட்டுமானங்களையும் அமைப்பவர்கள் சமுதாயத்தில் வாழும் பிற மனிதர்களே. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கற்றுக்கொள்ளும் மொழி, அறிவியல் அறிவு, தொழில்நுட்பத் திறன்கள் யாவும் சமுதாயத்தின் பிற மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நமது வசதியான வாழ்வுக்காகக் கொடுக்கப்பட்டவை. அவை நமக்குக் கிடைக்கும்வகையில் நடக்கும் வியாபாரம்கூடச் சமுதாய ஏற்பாடுகள்தாம்.
நம் நாட்டின் வளங்களை எல்லோரும் வாழும் வகையிலும், பாதுகாப்பாகவும் நலமாகவும் வாழ்ந்து முன்னேறும் வகையிலும் சட்டங்கள் இயற்றி, உட்கட்டுமானங்களை மேலாண்மைசெய்து வழிநடத்திட அரசு இயந்திரங்களும் ஜனநாயகமும், அறநெறிக் கலாச்சாரங்களும் நம் சமுதாயத்தால் சமைக்கப்பட்டவை.
தான் அல்லது தனது குடும்பம்பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு சமுதாயம்பற்றிக் கவலைப்படாது வாழலாம் என்ற தனிமனித முதன்மைக் கொள்கை மனிதவாழ்வின்; முழுமைக்கு ஏற்றதாக இல்லை. ஒரு சமுதாயத்திற்காக அதன் உறுப்பினர்களின் வாழ்வைப் பலியிட முடியாது என்பது உண்மை எனினும், சமுதாயத்தை நுகர்பவர்களாக மட்டும் மனிதர்களை வளர்க்கவும் முடியாது. தனி மனிதர்களுக்காகச் சமுதாயமா, அல்லது சமுதாயத்திற்கான தனிமனிதர்களா என்ற கேள்வி அபத்தமானது. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. தனிமனிதர்களைக்கொண்டு தனிமனிதர்களால் வாழ்வதுதான் சமுதாயம்; சமுதாயத்தில், சமுதாயத்தால்தான், தனிமனிதர்கள் வாழவும் செய்கின்றனர்.
நம் சமுதாயத்தைப்பற்றிக் கவலைப்படாது வாழும் வாழ்;க்கை முழுமை வாழ்க்கை அல்ல. நம் சமுதாயம் நாம் நலமாக வாழப் பங்களிக்கிறது என்றால் நாமும் நம் சமுதாயம் வாழப் பங்களிப்பதே நிறைவாழ்வுக்குப் பொருத்தமானது. மனிதர்களின் நிறைவாழ்வின்; முக்கியமான ஒரு பரிமாணம் அது.
சமுதாய ஈடுபாடு என்றால் என்ன?
நாம் வாழும் சமுதாயத்தின் நலவாழ்வுக்காக அதன் செயல்பாடுகளில் பல்வேறு வகைகளில் ஈடுபாடு காட்டுவதைச் சமுதாய ஈடுபாடு என்று சொல்லாம். ஆனால் பல்வேறு ஆய்வாளர்கள் பல்வேறு வரையறைகளைக் கொடுத்துள்ளனர். அவின்சன், மெகலியேட் மற்றும் பெஸ்கோசோலிடோ (2007) ஆகியோர் ஒரு தனிமனிதர் பல்வேறு வழிகளில் தனது சமுதாய உறவுகளிலும் கடமைகளிலும் பங்ககேற்பதைச் சமுதாய ஈடுபாடு என வரையறுக்கின்றனர். ஆனால் ஷாங், ஜியாங் மற்றும் கரோல் ஆகியோர் ஒருவர் தம் சமுதாயத்தில் உறுப்பினராக வாழவும் பிற உறுப்பினர்களோடு உறவுகொள்ளவும் அர்ப்பணம் கொண்டிருப்பதைச் சமுதாய ஈடுபாடு என வரையறுக்கின்றனர். அண்மைக் காலங்களில் தொழில் நிறுவனங்கள் தங்கள் சமுதாயப் பொறுப்புணர்வைப் புரிந்துகொண்டு, சமுதாய வளர்ச்சிக்காகப் பங்களிப்பதையும் சமுதாய ஈடுபாடு என்று அழைக்கத் துவங்கியிருக்கின்றனர்.
பல்வேறு மக்கள் இயக்கங்களும் விடுதலை இறையியல் போன்ற மதம் சார்ந்த சித்தனையாளர்களும் சமுதாய ஈடுபாட்டினை இன்னும் ஆழமாகப் பார்க்கின்றனர். தாம் வாழும் சமுதாயத்தின் உறுப்பினர் யாவரும் நிறைவான விடுதலை வாழ்வு வாழ்ந்திடத் தேவையான கருத்தியல் மற்றும் கொள்கைகளை மனதில் கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமுதாய மாற்றத்திற்காகவும் பல்வேறு நிலைகளிலும் தளங்களிலும், தனிமனிதராகவோ அல்லது குழுக்களாகவோ அல்லது இயக்கங்களாகவோ ஈடுபட்டு உழைப்பதனைச் சமுதாய ஈடுபாடு எனலாம்.
தன் சமுதாயம் வளர்வதற்காக உழைக்கும் பொறுப்பு தனக்கு உண்டு என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் இருத்தல் வேண்டும். சமுதாயத்தின் விதிகளும் வழக்கங்களும் மனிதர்களின் விடுதலை வாழ்வுக்கும் உரிமை வாழ்வுக்கும் தடையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை மாற்றி அமைத்திட உழைத்திட முன்வரும் மனநிலை வேண்டும். தன் சமூகத்தின்;, சிறப்பாக ஏழைகள், துன்புறுவோர், உரிமை மறுக்கப்பட்டோர், அநீதிக்கு உட்படுத்தப்பட்டோர், அடக்கி ஆளப்படுவோர் ஆகிய இவர்களின் மகிழ்வையும் வருத்தங்களையும் புரிந்துணர்ந்துகொண்டு அவர்களின் விடுதலைக்காக உழைத்திட வேண்டும். அதாவது மனித சமுதாயத்தை எல்லா நிலைகளிலும் மனிதத்தன்மையுடையதாக மாற்றிட வேண்டும்.