சமுதாய ஈடுபாட்டு வடிவங்களும் தளங்களும்

Home  /   சமுதாய ஈடுபாட்டு வடிவங்களும் தளங்களும்
சமுதாய ஈடுபாட்டு வடிவங்களும் தளங்களும்

சமுதாய ஈடுபாட்டு வடிவங்கள்:
தாம் வாழும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பிரச்சினையில்லாமலும், உறுப்பினர் அனைவரின் உரிமைகளையும் மதித்தும் நல்லுறவோடு வாழுதலே மிகப்பெரும்பான்மையோரின் சமுதாய ஈடுபாடாக அமைகிறது. இவர்களில் பெரும்பான்மையோர், தம் பணிவாழ்வால், கல்வி, திறன்வளர்த்தல், தொழில் நுட்பம், பொருள் உற்பத்திகள், விவசாயம், கலைப்படைப்புகள், போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, தம் வாழ்வை வளப்படுத்திக்கொள்வதோடு, தம் உழைப்பால் சமுதாயம் வளர்ந்திடவும் பங்களித்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்னும் பலர் தம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், மற்றும் பிறருக்கும் தேவைகளில் தம் பொருட்கள், கருத்துகள், திறன்கள், நேரம், இவைகளை வழங்கி உதவிகள் செய்தல் வழியாகத் தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்துகின்றனர். இன்னும் பலர் துன்புறுவோரின் துயர் துடைத்திடும் தம் இரக்கச் செயல்களால் தம் சமுதாய அக்கறைக்கு வடிகால் தேடுகின்றனர்.

தாம் வாழும் சமுதாயமும் மக்களும் முன்னேற்றம் அடைந்திட, பல்வேறு திட்டங்களை வகுத்துக்கொண்டு சேவை முகமைகளையம் நிறுவனங்களையும் உருவாக்கிக்கொண்டு, அதற்குரிய வளங்களையும் தேடிக்கொண்டு, சமூகசேவையின் வழியாக தம் சமுதாய ஈடுபாட்டினை வெளிப்படுத்துகின்றனர் சிலர். இத்தகைய சேவை நிறுவனங்களோடு தம்மை இணைத்துக்கொண்டு, குறிப்பிட்ட பணிகளைத் தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படும் வழக்கம் தற்காலத்தில் அதிகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

சமுதாயம் இருக்கும் நிலையினை ஏற்றுக்கொண்டு, தனிமனிதர்களுக்கு உதவியும், சமூக முன்னேற்றத்திற்குத் திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டால்மட்டும் அனைத்து மனிதர்களின் விடுதலைவாழ்வை நிலைநாட்டிட முடியாது. இப்போது சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும், அடிமைத் தனங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் வரலாற்று வேர்களில் உண்டு. இன்றிருக்கும் சமுதாய அமைப்பும் பொருளாதார உறவுகளும், மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி நிலைப்படுத்தும் கலாச்சார நம்பிக்கைகளும் வழக்கங்களும் மனிதர்களின் பிரச்சினைகளுக்குக் காரணங்களாக உள்ளன. இவைகளில் மாற்றங்களைக் கொணரும்போதுதான் மனிதச் சமுதாயத்தின் வாழ்வில் உண்மையான விடியலைக் காணமுடியும்.

எனவே, மனிதச் சமுதாயம் செயல்படும் விதம், அதனைச் செயல்படவைக்கும் பல்வேறு சக்திகளின் இயங்கியல், சமூக-கலாச்சார-பொருளாதாரச் செயலமைப்புகள், முதலியவைபற்றி ஆழமாகக் கற்றுத் தேர்ந்து, சமுதாயத்தைப் பகுப்பாய்வு செய்து, மனித சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணங்களைச் சுட்டிக்காட்டி, புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அரசியல் அமைப்புகளையும் வகுத்துக்கொடுக்கும் மாபெரும் பணியைச் சிலர் செய்கின்றனர். இத்தகைய அறிஞர்களின் சமுதாய ஈடுபாட்டுப்பணி உன்னதமானது. தங்கள் எழுத்து, பேச்சு, பயிற்சிகள் வழியாக மக்களின் உரிமைகள்பற்;றிய விழிப்புணர்வு கொடுத்து, கருத்துப்பரவலாக்கம்வழி மனிதர்களைச் சமூக மாற்றம் நோக்கி வழிநடத்தும் இவ்வறிஞர்கள் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

தனிமனிதர்களாகச் சமுதாயத்தில் ஈடுபடுதல் சில மாற்றங்களை நிச்சயம் உருவாக்கும் என்றாலும், குழுக்களாக, இயக்கங்களாக இணைந்து செயல்படும்போதுதான் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பது வரலாறு படித்துத் தந்திருக்கும் பாடம். ஊறிப்பபோன மூடநம்பிக்கைகளும், புரையோடிப்போன சாதியம் போன்ற ஏற்றத்தாழ்வு அமைப்புகளும், ஏழைகளை இன்னும் இன்னும் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொருளாதார உறவமைப்புகளும் தனிமனிதச் சேவைகளால் மாறிவிடுவதில்லை.

மேலும், இன்றய காலகட்டத்தில், நம் சமுதாயம் ஓர் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் மக்களாட்சி தேசமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் சமுதாய வாழ்வின் மிகப்பெரும்பான்மையான துறைகள் அரசின் அதிகரா வரம்புக்குள் வருவன. மாற்றங்களை அரசுகளே கொணர முடியும். அதாவது மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் தலைமையில்தான் நாட்டு மக்களின் வாழ்வு மாற்றம் பெற்றிட சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்த முடியும்.

மனிதர்களுக்குத் தங்கள் உரிமைகள்பற்றி விழிப்புணர்வு கொடுக்க வேண்டும், சமூக-கலாச்சாரப் பழக்க வழக்கங்களில் மாற்றம் உருவாக்கும் வகையில், அதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இப்பணிகளைச் செய்வதற்கு அரசு அதிகாரிகளும் தலைவர்களும் மக்கள் தேவைகளுக்குச் செவிமடுக்கவைக்க வேண்டும், புதிய மாற்றங்களை உருவாக்கிட முன்வரவைக்க வேண்டும். எனவே ஒரு புறத்தில் எழுத்து மற்றும் கலைவடிவங்கள் வழியாக மக்கள் தேவைகளைப் புரியவைக்க வேண்டும். தம் தேவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், தம் உரிமைகளைப்; பாதுகாத்துக்கொள்ளவும் மக்களுக்குச் சட்டத்தால் கொடுக்கப்பட்டிருக்கும் சட்டங்களின் அடிப்படையில் அரசிடம் விண்ணப்பங்கள் வழியாகத் தனியாகவோ கூட்டுமுயற்சியாகவோ கேட்க வேண்டும். மாற்றங்கள் ஏற்படாதபோது, தேவையானால் நம் தேசத்தந்தை காந்தி கற்பித்துத் தந்த தார்மீக வழிகளில் போராட்டங்கள் நடத்திடவும் வேண்டும். எனவே சமுதாய ஈடுபாட்டின் உயர்ந்த வெளிப்பாடாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்து அரசியலில் ஈடுபடுவதையும், அவர்களோடு நின்று போராடுவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய ஈடுபாடுகள் யாவும் தன்னலம் கருதாமல் பொதுநலம் நாடிச் செய்யப்படுவது; அதாவது பிற மனிதர்கள் மற்றும் சமுதாய நன்மைக்காகச் செய்வது சிறப்பு.

சமுதாய ஈடுபாட்டின் தளங்கள்:
மனிதர்கள் யாவரும் நிறைவாழ்வு வாழ வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் சமுதாய ஈடுபாட்டின் நோக்கம் என்று கொள்வதாயிருந்தால், மனிதர்களைப் பாதிக்கும் அனைத்துத் தளங்களிலும் ஈடுபாடு செலுத்துவதே முறையாகும். ஏழையர் உதவிகள், கல்வி உதவிகள், நலவாழ்வுக்கான மருத்துவ உதவிகள், இயற்கை நலம் பேணுவது, உளவியல் ஆற்றுப்படுத்தல் மற்றும் வாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சமூகச் சேவை அடிப்படையில் செயல்படுத்துவது முக்கியமானது.

மேலும் மனித உரிமைகளைக் காத்திடுதல், கொத்தடிமைகள், சமத்துவத்திற்கு எதிரான சாதிய அடக்குமுறைக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் உட்படுத்தப்படுவோர் ஆகியோரின் உரிமைகளைக் காத்தல், மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஏழைகளின் வாழ்வாதார உரிமைகள், பெண்களின் சமத்துவம், குழந்தைகளின் உரிமைகள், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகள், முதியோரின் உரிமைகள், சமூக அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுத்தப்படும் மனிதர்களின் உரிமைகள் ஆகியவற்றைக் காத்தல், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் என இன்னும் பல்வேறு சாராரின் உரிமைகளைக் காத்திடச் செயல்பட வேண்டிய தளங்கள் ஏராளம்.

மனிதர்கள் நிறைவான வாழ்வு வாழ்வதற்கு இயற்கையைப் பாதுகாப்பது முக்கியம். ஈவு இரக்கம் இல்லாமல் பிராணிகளை வதைப்பதும், கட்டுக்கடங்காத இலாப ஆசையினால் இயற்கை வளங்களை அளவுக்கதிமாகச் சுரண்டுவதும், தவறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கையை மாசுபடுத்தி அழிப்பதும், பூமியில் இனி மனிதவாழ்க்குச் சாத்தியமில்லையோ என்று அஞ்சும் அளவுக்கு அதிகமாகிவிட்டன. பூமி நம் பொ இல்லம். ஒருசிலர் தம் இலாபத்திற்காக இதனை அழித்துவிட நாம் அனுமதிக்க முடியாது. எனவே இயற்கையைப் பாதுகாத்திட உழைப்பதும், மனித இனத்தைப் பாதுகாக்கச் செய்யப்படும் முக்கியமான சமுதாய ஈடுபாட்டுச் செயல் ஆகும்.

0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x