ஆன்மீக வாழ்வில் ஆரோக்கியம் பெறப் பரிந்துரைகள்

Home  /   ஆன்மீக வாழ்வில் ஆரோக்கியம் பெறப் பரிந்துரைகள்
ஆன்மீக வாழ்வில் ஆரோக்கியம் பெறப் பரிந்துரைகள்

ஆன்மா ஒவ்வொரு மனிதரிலும் இருக்கும் ஓர் அம்சம். எனவே ஒவ்வொரு மனிதருமே ஆன்மீக வாழ்வில் மலர முடியும். ஆன்மீகத்தில் நாம் வளரவேண்டியிருக்கிறது என ஒத்துக்கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது முதல்படி.

“ஆனால் பொதுவாக மனிதர்கள் தம் உண்மைத் தன்மையை (தம் ஆன்மாவை) எதிர்கொள்ளாதிருக்க எதை வேண்டுமானலும் செய்யத் தயாராய் இருப்பார்கள்” என வருத்தப்பட்டார் ஆன்மீகம்பற்றி அதிகம் ஆய்வு நடத்திய கார்ல் யுங் என்னும் உளவியல் அறிஞர்.

மதநம்பிக்கை உள்ளவர்களுக்குத் தங்கள் மதத்தில் இருக்கும் சடங்குகளும் பக்தி முயற்சிகளும் ஆன்மீக வாழ்வின் முதல் படியாக இருக்க முடியும். ஆனால் சடங்குகளில் பொருளறிந்து முழு ஆளுமையும் ஒன்றித்து ஈடுபடுதல் முக்கியம். இச்சடங்குகள் மனிதர்களை அடையாளமுறைச் செயல்கள் வழியாகக் கடவுளோடு உறவுகொள்ள அழைத்துச் செல்கின்றன. உண்மையான மதநம்பிக்கைகள் பிற மனிதர் யாவரையும், படைப்புகளையும் அன்புசெய்து தற்கடத்தலில் பணியாற்ற வழிகாட்டுகின்றன.

“ஆன்மீகத்தில் வளர்வதாக ஒருவர் கற்பனைகளில் சஞ்சரிப்பதால் உள்ளொளி பெறுவதில்லை. மாறாக, தனக்குள் இருக்கும் இருட்டினைப்பற்றிய விழிப்புணர்வு பெறும்போதுதான்.” என்கிறார் கார்ல் யுங்.

ஐரோப்பாவில் பழங்காலத்து இரசவாதம் மலிவான ஈயத்தை மதிப்புமிக்கத் தங்கமாக மாற்றும் முயற்சியாகக் காட்டப்பட்டது. தமிழ்ச் சித்தர்கள் மத்தியிலும் இந்த இரசவாதக் கலை இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. காரல் யுங் அதனை ஓர் அடையாளம் எனக் கொண்டார். அதாவது சாதாரண மனிதரை உயர்ந்தவராக மாற்றும் இரசாயனம்தான் அது என்றார்.

உங்கள் வாழ்வு மதிப்பில்லாதது, ஏதோ குறைகள் இருக்கின்றன, உள்ளார்ந்த முரண்பாடுகள் நிறைந்தது என நினைக்கலாம். அந்தச் சாதாரண வாழ்விலே முடங்கிவிடவும் நினைக்கலாம். ஆனால் வாழ்கை வளர்வதற்கான ஒரு வாய்ப்பு. சவால்களைச் சந்தித்து வளர வேண்டும். உங்கள் வாழ்வில் இருக்கும் குறைபாடுகளையும் முரண்பாடுகளையும் தாண்டி நிறைவான வாழ்வு வாழ்ந்திட உங்கள் ஆன்மீகத் தேடல் வழிபயக்கும். ஆன்மீக இரசவாதம் என்பது தனிமனிதரின் உள்ளார்ந்த மாற்றத்தைக் குறிப்பது. அதனை தான் மட்டுமே தனக்குள் செய்ய முடியும். அதற்கான சில வழிகாட்டுதல்களையும் அவர் தருகிறார்.

• நீங்கள் நீங்களாக இருக்க முயலுங்கள். உங்கள் சமூக முகமூடியைக் கழற்றி விடுங்கள். இயல்பாக இருக்கும் தைரியம் பெறுங்கள். உங்களின் எல்லாமும், உங்கள் ஆற்றல்களும் பலவீனங்களும், ஏன் வெட்கத்துக்குரியவை என்று நீங்கள் நினைப்பவைகளும்கூட உங்களில் ஒரு பகுதிதான். ஏற்றுக்கொள்ளுங்கள். இவைகளின் இரசாயனமே உங்களின் தனித்தன்மை, உங்களின் அழகான ஆளுமை.
• உங்கள் உள்ளிருக்கும் இருளைக் கண்டுகொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள். ஒளியை நோக்கிய ஏக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். தன் விழிப்புணர்வு என்பது தன் தான்மைபற்றிய அறிவு மட்டுமல்ல. தன் ஆழ்மனத்தின் செயல்பாடுகளையும் அறிதல் ஆகும். உள்ளார்ந்த சுதந்திரமும் ஆழ்ந்த மறையனுபவமும் பெற்றிட உங்களுக்குள் இருக்கும் உந்துதலை உணருங்கள்
• உங்கள் ஆழ்மனத்தின் இருளைச் சந்தியுங்கள். அங்கே நீங்கள் வெளியில் கொணரத் தயங்கும் உங்களின் எதிர்துருவத்தைக் காண்பீர்கள். அது உங்கள் நிழல். அதுவும் உங்களில் ஒரு பகுதி, என்பதைப் புரிந்துகொண்டு வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளுங்கள். எடுத்துக்காடடாக: நீங்கள் வெளிப்புறத்தில் ஓர் அகிம்சாவாதியாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் நிழலாக உங்களுக்குள் இருக்கும் வன்முறையைக் காண்பீர்கள்.
• ஆண்களில் எதிர்துருவம் பெண்மை. பெண்களில் எதிர்துருவம் (நிழல்) ஆண்மை. ஆண்மை நிழலாக இல்லாத பெண்ணும் இல்லை, பெண்மை நிழலாக இல்லாத ஆணும் இல்லை. ஆண்மையும் பெண்மையும் வெளிப்படும்போதுதான் ஒருவர் முழுமனிதர் ஆகிறார். அத்தகைய ஓர் ஆளுமையை வளர்க்க முயலுங்கள்.
• உங்கள் ஆழ்மனதில் இருக்கும் கதாநாயகன், கதாநாயகி, தாய். தந்தை, முனிவர் போன்ற ஆதிகால வாழ்வுருக்களைப் (யசஉhவைலிநள) புரிந்துகொள்ளுங்கள். அவற்றிற்க்கேற்பவே இப்போதும் நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.
• உங்கள் கனவுகளின் பொருளைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் ஆழ்மனதின் இராஜபாதை அது.

இத்தகைய தன்விழிப்புணர்வுடன் தன் ஆளுமையின் முழுமையாக்கத்தையும் நோக்கிய பயணத்தை ஊக்குவிக்கும் காரல் யுங் அவர்களின் அறிவுரையோடு, விக்டர் ப்ராங்க்ல் கொடுக்கும் தற்கடத்தலுக்கான வழிகாட்டுதல்களையும் புரிந்துகொள்வோம்.
விக்டர் ப்ராங்க்ல் தற்கடத்தலுக்கு உதவும் மூன்று விழுமியங்களை முன்வைக்கிறார்.

  1. உங்கள் சாதாரண வாழ்வில் நிகழும் அனுபவங்களை நனறியுணர்வோடு பெற்றுக்கொள்ளுங்கள். சிறப்பாக அன்புறவுகளையும் காதல் உறவுகளையும், உங்களைச் சுற்றியிருக்கும் அழகையும் கொண்டாடுங்கள்.
  2. உங்களுக்கு மாபெரும் கொடைகளைத் தந்துள்ள இந்தப் பிரபஞ்சத்திற்கு உங்கள் படைப்பாற்றல்வழி திருப்பிக் கொடுங்கள். உங்கள் ஆற்றல்மிக்க உழைப்பினாலும், படைப்பாற்றலாலும் இந்த உலகம் வளரப் பங்களி;யுங்கள். நல்லதொரு மாற்றத்ததை உருவாக்குவதில் வாழ்வின் அர்த்தம் காணுங்கள். சமூகத்திற்குப் பயனுள்ள ஏதாவது படைத்திடுங்கள்.
  3. சவால்களைத் துணிந்து சந்தியுங்கள். சவால்மிக்க நேரத்தில்கூட உங்கள் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் விடாதிருங்கள். உள்ளார்ந்த சுதந்திரத்தை அனுபவியுங்கள்.

இன்னும் நடைமுறைக்கேற்பச் சொல்வதாக இருந்தால், உங்கள் சாதாரண அனுபவங்களை முழு விழிப்புணர்வோடு, உடல், உணர்ச்சிகள், எண்ணம், ஆன்மா ஆகிய அனைத்துப் பரிமாணங்களிலும் ஆழமாக அனுபவிக்கப் பழகுங்கள். அமைதியாக முழு விழிப்புணர்வோடு மட்டும் இருக்கவும், வாழ்வைப்பற்றித் தியானிக்கவும் பழகிக்கொள்ளுங்கள். ஆழமான உறவுகளிலும் உண்மையான அன்பிலும் உணர்ச்சிபூர்வமாகத் திளைத்திருங்கள். இயற்கையோடு தனித்திருக்கப் பழகிக்கொள்ளுங்கள். முதலில் அழகிய அமைதியான இடங்களை நோக்கிச் செல்லும் நீங்கள் எல்லா இடங்களிலும் இயற்கையின் இன்பத்தை உணரும் நிலைக்கு, அத்தோடு உறவாடும் நிலைக்கு வளர்வீரகள்.

ஸ்டீபன் ஃப்ளட் கூறுவதுபோல அடிப்படைத் தியான முறைமைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். அறிவினாலும் ஞானத்தினாலும் உங்களை வளப்படுத்தி உங்கள் மனசாட்சியை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆன்மீகத்தை வளர்த்துக்கொள்ள நீங்களே உங்களுடைய ஆளுமைக்குப் பொருத்தமான புது வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். ஆன்மீகப் பயணத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
ஆன்மீக வாழ்வில் சுயமுயற்சியால் வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு எனினும,; தன்னை அத்தகைய வாழ்வுக்கு அறிமுகப்படுத்த ஆன்மீகத்தின் ஆழங்களை அனுபவித்துச் சிறந்த ஒர் ஆசானை அல்லது வழிகாட்டியைத் தனக்கென வைத்துக்கொள்வது சிறந்தது.

தன்னைக் கடந்து பிறருக்காகப் பணியாற்றுவதில் தன்னைக் கரைத்துக்கொள்வதில் நிறைவு காணுங்கள். இந்தப் பிரபஞ்ச வெளியில் கணங்களின் சூறாவெளியில் இறையாற்றலை எங்கும் கண்டு, உங்களுக்குள் அது பிரதிபலிப்பதை அனுபவியுங்கள். இந்தப் பிரபஞ்ச இயற்கையோடு ஒன்றிணைவை அனுபவித்து இறைமைக்குள் இறைமையால் நிறைந்து வாழ்வதன் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டாடுங்கள்.

0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x