தற்கடத்தல் ஆன்மீகம்

Home  /   தற்கடத்தல் ஆன்மீகம்
தற்கடத்தல் ஆன்மீகம்

ஆன்மீகம்தான் மனிதர்களை மற்றப் பிராணிகளிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. ஆன்மீகத்தின் அடிப்படையான தற்கடத்தல் இல்லாமல் ஒருவர் முழுமையான மனிதராக வளர முடியாது என்கிறார் விக்டர் ப்ராங்க்ல். தற்கடத்தல்தான் ஒரு மனிதரின் வளர்ச்சியின் உச்சம்.

தன் வாழ்வின் முழுமையாக்கத்திற்காக இருக்கும் உட்தூண்டுதல்பற்றிய தன்விழிப்புணர்வே தன் முழுமையாக்கத்தின் வேர். அந்த உட்தூண்டுதலுக்கேற்ப உயிர்வாழ்தல், பாதுகாப்பு, அன்பு, தன்மதிப்பு, அறிவு, அழகியல் ஆகிய தேவைகள் யாவும் நிறைவேறும் வகையில் தன் ஆற்றல்களையும் படிப்படியாக வெளிப்படுத்தி, தன்முழுமையாக்கத்தை நோக்கிப் பயணம் செய்கிறது தன்விழிப்புணர்வு பெற்ற தான்மை.

தன் தேவைகள் நிறைவேறி, தன் உள்ளார்ந்த ஆற்றல்கள் யாவையும் வெளிக்கொணர்ந்து தன் முழுமையாக்க வாழ்வு வாழ மனிதருக்கு இயல்பிலேயே உள்ளார்ந்த உந்துதல் உள்ளது என்பது ஆபிரகாம் மாஸ்லோ அவர்களின் கருத்து. இந்த இயங்கியல் முழுவதிலும் கவனம் தன் தேவைகள் மற்றும் ஆற்றல்கள் மீது குவிகிறது. தன் தேவைகள் நிறைவேறுவதன் உச்சம் தன்முழுமையாக்கம் என்றாலும், தன் தேவைகள் யாவும் நிறைவேறுவதால் மட்டும் தன்முழுமையாக்கம் நிகழ்ந்துவிடுவதில்லை. தற்கடத்தலிலேயே அது முழுமை பெறுகிறது என்கிறார் விக்டர் ப்ராங்க்ல்.

அதாவது ஒரு மனிதர் எப்போது தன்னையும் கடந்து பிறருக்காகவும், இந்த உலகுக்காகவும் தன்னை அர்ப்பணித்து உழைப்பதில் வாழ்வின் அர்த்தம் காணுகிறாரோ அப்போதுதான் அவர் வாழ்வு முழுமை பெறுகிறது. தற்கடப்பு நிலையில் தன் தேவைகள் தள்ளிவைக்கப்பட்டு, பிறரின் தேவைகளும் அவர்களுக்கான சேவையும் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

அன்பைப் போதிக்கும் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இத்தகைய தற்கடத்தல்மிக்க வாழ்வைத்தான் முன்வைக்கின்றன. பக்தியும் சடங்கு முறைகளும் இத்தகைய வாழ்வை நோக்கிய ஒரு வழிநடத்தலாகவே உள்ளன.

தன் தான்மையைத் தாண்டியவர்கள்; பிறரோடு உறவு கொள்வதில் தன்னலம் கடந்த அன்பு நெருக்கத்தையும் சொந்தம் பாராட்டும் உணர்வையும் கொண்டிருப்பதோடு, இயற்கையோடும் சொந்தம் கொண்டாடி ஒன்றிணையும் நிலையினையடைகின்றனர். தன் தான்மையைத் தாண்டி பொதுமையில் உறைகின்றனர். இந்தச் சிறப்பு இருப்புநிலையில் இந்தப் பிரபஞ்சம் தானும் மற்றனைத்தும் இணைந்த ஒருமையே என்ற மெய்யுணர்வு பெறுகிறார். எனவே எல்லா மனிதர்களோடு மட்டுமல்ல எல்லாப் படைப்புகளோடும் தனக்கிருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்கிறார். தான்மை தன்னையும் கடந்த உயர்வான ஓர் இலட்சியததிற்காகத் தன்னை வழங்கும்போதுதான் தன்முழுமையாக்கம் பெறுகிறது. இத்தகைய ஒன்றிணைவு மனிதர்களில் இயங்கும் ஆன்மீகத்தாலேயே நடக்கிறது. அதுவே முடிவிலாத் தன்மையை அடைந்திடும் ஏக்கத்தையும் இந்தப் பிரபஞ்சத்தின் காரணமான முடிவிலாப் பேராற்றலோடு இணையும் ஏக்கத்தையும் வாய்ப்பையும் கொண்டுள்ளது. இந்த முடிவில்லாப் பேராற்றலையே இறையென்கிறோம். இந்த ஏக்கத்தின் நீட்சி, பேராற்றலாம் இறையின் உடனிருப்பு பிரபஞ்சம் முழுதும் பரந்திருப்பதையும் தானும் அப்பேராற்றலுக்குள் இருப்பதையும் தனக்குள்ளும் அப்பேராற்றல் நிறைந்திருப்பதையும் உணர்ந்துகொள்ளும் பேறுநிலை தருகிறது.

ஆன்மீக வாழ்வில் அடையாளங்கள்:
பழகுபவர்களோடு உணர்ச்சி பூர்வமான ஆழமான தொடர்புக்காக ஏங்குபவர்கள். பிறரோடு உள்ள உறவில் மிகுந்த அக்கறை, சொந்த உணர்வு, உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு கொண்டிருப்பவர்கள்.

இயற்கையோடு ஒன்றிணைவைக் கொண்டவர்களாக, இறைவனோடும் ஆழந்த தொடர்பில் இருப்பவர்கள் அல்லது அத்தகையத் தொடர்புக்காக ஏங்குபவர்கள்.

உலகின் வேகம் மனிதர்களை எப்போதும் “பிசி”யாக இருக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்குகிறது. அதன் கலவரக் கொடுமையிலிருந்து விலகித் தனியாகவும் மௌனமாகவும் அமர்ந்து சிந்திக்கவும், தியானம் இறைவேண்டல் முதலியவைகளில் மனதைச் செலுத்தவும் விரும்புகின்றனர்.

நான் யார்? நான் ஏன் வாழ வேண்டும்? என் வாழ்வின் நோக்கம் என்ன? அதன் அர்த்தம் என்ன? இவைபோன்ற கேள்விகளுக்குத் தன்னைத் தானே உட்படுத்தி, தன் உறவுகளிலும் செயல்பாடுகளிலும் அர்த்தம் காண விழைபவர்கள். சாதாரண நிலையிலிருந்து பிரபஞ்சத்தோடு தன்னைத் தொடர்புபடுத்தி தன் இடத்தைத் தேடுபவர்கள்.

ஆனந்த மகிழ்வுக்காக ஏங்குபவர்கள். தன் வாழ்வில் நன்றியுணர்வால் பொங்கி மகிழ்பவர்கள். எளிமையை விரும்புவதால் எளிதாகத் திருப்தியும் நிறைவுணர்வும் பெறுபவர்கள். இயற்கை மற்றும் இறைமையின் அழகும் ஆற்றலும் அன்புப் பராமரிப்பும் உணரும்போது அவர்கள் மெய்சிலிர்த்து மலர்கின்றனர். தான் வாழ்வதன் மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்கள்.

படைப்பதில் உத்வேகம் கொண்டவர்கள். “ஆகா!!” அனுபவம் அவர்களைப் புளங்காகிதம் அடையச்செய்கிறது. புதுமையான ஒரு கருத்தோ அல்லது பொருளோ படைப்பதில் ஆனந்தம் அடைகின்றனர். அது பிறருக்குப் பயன்படுவதில் அர்த்தம் காணுகின்றனர்.

தற்கடத்தலுக்கான உள்ளர்ந்த உந்துதல் உடையவர்கள். தன்னையும் தன் தான்மையின் எல்லைகளையும் தாண்டி, மறைபொருள் தளத்தில் சஞ்சரிக்கவும், தன்னையும் கடந்து பிரபஞ்சத்தின் ஒரு துகளாகத் தன்னைப் பார்க்கவும், இந்த உலகிற்காகத் தன்னை வழங்கவும் ஏக்கமுடையவர்கள்.

பிரபஞ்சம் மற்றும் இறையோடு கொள்ளும் உறவில் தான்மை கரைந்து, பிரபஞ்சத்தோடும் இறையோடும் ஒன்றிணையும் பேரானந்த உச்ச அனுபவங்களை அவ்வப்போது அனுபவிப்பவர்கள்.

0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x