நமது கை, கால்கள், இதயம் என நம் உடலை எளிதாகப் புரிந்துகொள்கிறோம். நம் சிந்தனைகள், உணர்ச்சிகள் இவற்றைக்கொண்டு நம் உள்ளத்தையும் கண்டு கொள்கிறோம், இவற்றின் அனுபவம் நம் அற்றாட வாழ்வில் எளிதாக அமைகிறது.
சில நேரங்களில் மலை உச்சியில் நின்று பள்ளத் தாக்குகளில் மேகம் குவிந்த பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்விரிக்கும்போதும் சரி, கடற்கரையில் நின்று சூரிய உயதத்தைப் பார்த்து மயங்கும்போதும் சரி, வானத்தை உற்றுப்பார்த்து எண்ணமுடியா நட்சத்திரங்களைப் பார்த்து அதிசயி;க்கும்;போதும் சரி, இயற்கையின் அழகில் மயங்கி உள்ளம் சிலிர்த்துக்கொள்கிறோம். இந்த மாபெரும் பிரபஞ்சம் எவ்வளவு அழகானது, எவ்வளவு பரந்தது, அதன் செயல்பாடுகள் எவ்வளவு சிக்கலானவை என்பவற்றை நினைக்கும்போது நாம் மயங்கி நிற்கிறோம். இந்த மாபெரும் பிரபஞ்சதத்தின் ஒரு பகுதி நாம் என்ற உறவு நமக்கும் உள்ளுணர்ச்சியாக எழுவதையும், பிரமிப்பூட்டும் இவைகளையெல்லாம் இயக்கும் ஓர் ஆற்றல் உண்டு என்பதை நம் மனம் தானாகவே உணர்ந்து அதனை நோக்கி நமக்குள ஓர் அம்சம் சிலிர்த்து மலர்வதையும், அந்தப் பேராற்றலோடு தொடர்புகொள்ளத் துடிப்பதையும் உணரும் தருணங்கள் உண்டு.
அதுபோலவே வாழ்வில் சிக்கல்களில் முழ்கி விழிபிதுங்கி நிற்கும்போதும் சரி, பெரும் இயற்கைப் பேரிடர்களின் ஆற்றலில் ஆட்டிப்படைக்கப்படும்போதும் சரி இந்தப் பிரபஞ்சத்தின்முன் நாம் எவ்வளது சிறது என்ற உண்ர்வும், உலகெலாம் பராமரித்துக்கொண்டிருக்கும் மாபெரும் ஆற்றல் ஒன்றினை நோக்கி நமக்குள் ஒரு பகுதி தானாகவே அபயம் தேடும் அனுபவமும் நமக்குப் புதிதல்ல.
இத்த ஆழ்ந்த அம்சத்தை ஆன்மா என்றும் ஆவி என்றும் உயிர்மை என்றும் பல்வேறு சொற்களால் வெளிப்படுத்த முயன்றிருக்கிறது மனுக்குலம். வாழ்வின் சாரமாகவும், வேராகவும், அடித்தளமாகவும் இருக்கும் இந்த மானுட அம்சம் சாதாரண வாழ்வில் தினசரி அனுபவப்படும் ஆற்றலாக மாறி நிறைவாழ்வின் மற்ற அனைத்துப் பரிமாணங்களுக்கும் பொலிவைக் கொடுப்பதாக வளர்;ந்திட வேண்டும். அத்தகைய வாழ்வினை ஆன்மீகம் என்கிறோம்.
பல்வேறு மதங்களும் மெய்யியல் பாரம்பரியங்களும் பல்வேறு விளக்கங்களை இதுபற்றி முன்மொழிந்துள்ளன. ஆயினும் அண்மை காலங்களில்தான் உளவியல் துறையில் ஆன்மீகம் அல்லது ஆவி வாழ்வுபற்றிக் கவனம் செலுத்தி ஆய்வுகள் பல நடந்துள்ளன.
மனித வாழ்வின் பகுதியாக ஆன்மீக வாழ்வினை ஆல்போர்ட், வில்லியம் ஜேம்ஸ், கார்ல் யுங், ஆபிரகாம் மாஸ்லோ, விக்கடர் ப்ராங்க்ல் எனப் பல்வேறு உளவியலாளர்கள் கொண்டுள்ளனர்.
ஆன்மீக வாழ்வுக்கான ஓர் உட்தூண்டுதல் மனித ஆளுமையில் ஆழமாக அமைந்துள்ளது என்பதையும், எனவே வாழ்வின் உன்னத கேள்விகளை நோக்கி மனம் தானாகவே செல்ல அதுவே காரணமாகிறது எனவும் கூறுகிறார் ஆஸ்டின் டூறு.
மனிதர்களின் வாழ்வைப் பிற பிராணிகளிடமிருந்து பிரிக்கும் அம்சம் இவர்களுக்கு இருக்கும் அதிக அறிவுத்திறன் அல்ல, மாறாக இந்த ஆன்மீக வாழ்வுதான் என்பது பல அறிஞர்களின் கருத்து.
நேர்நோக்கு உளவியலில் மனிதர்களின் ஆரோக்கியநிலை (றநடடடிநiபெ) பற்றிய பரிமாணங்களை முன்மொழியும் வல்லுநர்கள் பெரும்பாலும் ஆன்மீக வாழ்வையும் ஒரு பரிணாமமாகச் சேர்த்திருப்பது மனிதவாழ்வில் ஆன்மீகத்தை அறிவியல் உலகம் வெகுவாய் அங்கீகரித்திருப்பதையே காட்டுகிறது.
வரையறை:
ஆன்மீக வாழ்வினை அறிவுபூர்வமாக வார்;த்தைகளால் வரையறுப்பது கடினம். அனுபவித்து உணர்ந்துகொள்வதே சிறப்பு. அனுபவங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடுவது மட்டுமல்ல, வார்த்தைகளையும் கடந்த உன்னத நிலையினதாகவும் உள்ளன. “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்” எனும் சொற்றொடர் ஆன்மீத்திற்குப் பொருந்தும்.
ஆயினும் அறிவியல் பார்வையில், வார்த்தைகளின் குறைபாடுகளையும் ஏற்றுக்கொண்டு, வரையறைகள் கொடுக்க வேண்டிய கட்டாயங்கள் உண்டு. மேலோட்டமாக மத ஒழுக்கங்களை ஆன்மீக வாழ்வாகக் கருதுவோரும் உண்டு. யாகங்கள், சடங்குகள், யோகா போன்ற பயிற்சிகளை ஆன்மீகத்தில் முன்னிறுத்திப் பார்போரும் உண்டு.
உலகத்தில 80 விழுக்காடு பேர் ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்கிறது புள்ளி விபரம். அதாவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பவர்கள் இவர்கள். பெரும்பாலானவர்களின், ஆன்மீகம் கடவுள் நம்பிக்கையையும் மத ஒழுக்கங்களையும் சார்ந்தே கலாச்சார ரீதியாக வளர்க்கப்படுகிறது.
ஆயினும், அண்மைக் காலத்தில் சமயப் பக்தி ஒழுக்கங்களை ஆன்மீகத்திலிருந்து வேறுபடுத்திப் பார்த்து, ஒரு மதத்தில் உறுப்பினராக இல்லாமலே ஆன்மீகத்தில் ஆழமான வாழ்க்கை வாழ முடியும் என்று உறுதி செய்வோரும் உண்டு. நிறுவனமயமாகிவிட்ட மதங்களில் அதிகார மையங்கள் உருவாகி, ஏற்றத் தாழ்வுகள் நியாயப்படுத்தப்படுவதும், அறிவியலுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளும் அணுகுமுறைகளும் சகித்துக்கொள்ளப்படுவதும் கண்டு வருந்தி, மதங்களைத் தாண்டிய ஓர் ஆன்மீகத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டிருக்கின்றனது. உண்மையில் ஆன்மீகம் மனித ஆளுமையின் ஒரு முக்கியப் பகுதி என்னும்போது ஆன்மீகத்திற்குக் கடவுள் நம்பிக்கைக்கூடத் தேவையில்லை என வாதிடுவோரும் உண்டு.
அந்த வகையில் உளவியலாளர்கள் மாஸ்லோ, விக்டர் ப்ராங்கல், பமிலா ரீட் ஆகியோர் தற்கடத்தல் (வசயளெஉநனெநnஉந) அனுபவம்பற்றிக் கொடுத்துள்ள கோட்பாடுகள் ஆன்மீகத்திற்கு மிக நெருக்கமானவை.
ஒருவர் தன் விழிப்புணர்வின் ஆழமான அனுபவம்கொண்டு, தன்னை இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகக் கண்டு, பிரபஞ்சத்தோடும் அதன் எல்லாப் படைப்புகளோடும் ஒர் ஒன்றிணைவை உணர்வதும், இந்த பிரபஞ்சத்திற்குக்; காரணமாகி வழிநடத்திவரும் எங்கும் நிறைந்திருக்கும் அந்த மாபெரும் ஆற்றலினைத் தனக்குள்ளும் கண்டு உறவாடி சரண் அடைவதும், தான்-தனது என்ற எல்லைகளைக் கடந்து பிறருக்கும் உலகிற்கும் பணியாற்றும் பணிவாழ்வில் பொருள்காண்பதும் ஆன்மீகம் எனலாம். இது தினசரி வாழ்வின் உயிரோட்டமாக அனுபவப்படும்போது ஆன்மீக வாழ்வாகிறது.